தனது குட்டு உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு விமானத்தைக் கடத்தவுள்ளதாக மின்னஞ்சல் அனுப்பிய நபரை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர்.

வம்சி குமார் (32) என்ற இந்த நபர் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் வம்சிகுமார் முகநூலில் ஏற்படுத்திக்கொண்ட பழக்கம் காதலாக மாறியது. அப்பெண்ணை நேரில் சந்திக்க வம்சி குமார் விரும்பினார்.

இதற்குச் சம்மதித்த அந்தப் பெண், சென்னையில் இருந்து மும்பைக்கு விமானச் சீட்டு ஒன்றைப் பெற்றுத் தருமாறும், அங்கே இருவரும் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார். எனினும், விமானச் சீட்டு வாங்கப் போதுமான பணம் இல்லாத வம்சி குமார், போலி விமானச் சீட்டொன்றை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியிருந்தார். அதன்படி, கடந்த பதினாறாம் திகதி அந்தப் பெண் மும்பை செல்லத் தயாராக இருந்தார்.

6_V_Airport

தனது காதலி விமான நிலையத்துக்குச் சென்றால் தனது குட்டு உடைந்துவிடும் என்று பயந்த வம்சி எப்படியாவது அவரைத் தடுக்க நினைத்தார். இதற்காக சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து புறப்படவுள்ள விமானங்களை ஆறு பேர் கொண்ட குழுவொன்று கடத்தப்போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து குறித்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட இணைய இணைப்பு இலக்கம் மூலம் வம்சி குமாரை பொலிஸார் கைது செய்தனர். மேலும், வம்சி குமார் அனுப்பியிருந்தது போலி விமானச் சீட்டுதான் என்பது அவரது புதிய காதலிக்குத் தெரிந்தும் விட்டது.

பொய்யான மிரட்டல் கடிதம் விடுத்த குற்றத்தின் பேரில் வம்சி குமார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

5,253 total views, 1 views today