பிரித்தானிய பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நாட்டை மேலும் அபாயகரமான சூழ்நிலையில் தள்ளும் என முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு எதிர்கொள்ளும் அரசியல் நிலைமை முன்னோடி இல்லாதது என்பதுடன் ஆபத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் தெரேசா மேயின் அழைப்பிற்கு நேற்று நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பிற்கு 522 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 13 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், குறித்த நடைமுறையை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்ற மேல்சபையின் அனுமதியும் தேவையில்லை. எனவே பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடத்துவதற்கும் அதற்கு முன்னதாக ஜூன் 3 ஆம் திகதி நாடாளுமன்றை கலைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய உடன்படிக்கைகள் சிறந்ததோ இல்லையோ, அதனை பொருட்படுத்தாமல் மக்கள் மீது திணிப்பதற்கு தெரேசா விரும்புவதாக ரொனி பிளேயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
therthal

2,474 total views, 2 views today