ஒன்ராறியோ மாநில அரசாங்கம் முன்வைத்துள்ள மின்கட்டண குறைப்புத் திட்டம், சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் லிபரல் கட்சியின் சதி என புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் கடுமையாக சாடியுள்ளார்.

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு கட்டணக் குறைப்பும், அதனை அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கு கட்டண அதிகரிப்பும் என்ற அறிவிப்பைக் கொண்ட அந்த திட்டம் ஒன்ராறியோ மக்களுக்கு கட்டுப்படியானதாக இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மின்சாரத்திற்கான செலவீனங்கள் இந்த ஆண்டில் இயல்பாகவே குறைவடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் உண்மையான செலவீன விபரங்களை ஒன்ராறியோ அரசாங்கம் மக்களிடமிருந்து மறைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் நீண்டகாலத் திட்டத்தில் மின்சாரச் செலவீனங்கள் எவ்வாறு அமையப் போகிறது என்ற கணிப்பீட்டுத் திட்டத்தினை ஒன்ராறியோ அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஒன்ராறியோ லிபரல் அரசாங்கம் இந்த மின் கட்ணக் குறைப்புத் திட்டத்தை கடந்த வாரமே வெளியிட்டுள்ளது என்றும், இந்த நிலையில் அது தொடாபில் மக்கள் கருத்துக்களை உள்வாங்குவதற்கு அவகாசம் வழங்காது அதனை சட்டமன்றில் நிறைவேற்றிவிடுவதற்கு அது அவசரப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

8,727 total views, 1 views today