எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த 100, 5 ரூபாய் நாணயங்கள்!

advertisement

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தும் விதமாக அவரது உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாணயத்தின் முன்புறம் அசோகச் சக்கரமும், பின்புறத்தில் எம்.ஜி.ஆரின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகிரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதுடன், அதைக் குறிக்கும் வகையில் 1917-2017 என்ற ஆண்டுகளும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூறு ரூபாய் நாணயங்கள் 35 கிராம் எடையும், 5 ரூபாய் நாணயங்கள் 6 கிராம் எடையும் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயங்கள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதேபோல், கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் 10 மற்றும் 100 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

advertisement