ஆண்களை விட பெண்கள் மூளைதான் டாப்... சுறுசுறுப்பும் ஜாஸ்தியாம்!

Report
22Shares

ஆண்கள் மூளையை விட பெண்களின் மூளைதான் அதிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவாகச் செயல்பட முடிகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 46,034 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கிடையிலான மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இது மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் சுறுசுறுப்பு

குறிப்பாக, ஒரு விஷயத்தை உற்றுநோக்குதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஆணின் மூளையைக் காட்டிலும் பெண்ணின் மூளை மிகத் தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

மூளையை பாதிக்கும் நோய்கள்

இந்த ஆய்வின் மூலமாக, இருபாலருக்குமான மூளையில் உள்ள வேறுபாடுகளை அளவிடுவதன் மூலம் அல்சீமர் போன்ற மூளை தொடர்பான நோய்கள் ஆண், பெண்ணை எவ்வாறு தாக்குகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அவ்வாறு தாக்கினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஆண்கள் பாதிப்பு

பெண்கள் பெரும்பாலும் அல்சீமர், மன அழுத்தம், ஆகியவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம், ஆண்கள் நடத்தை தொடர்பான பிரச்னைகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

உறுதியான பெண்கள்

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் முன்பக்க மூளை (பிரிஃப்ரோன்டல் கார்டெக்ஸ்) பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர்.

ரத்த ஓட்டம் அதிகரிப்பு

அதேபோன்று, பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின்போது, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு உட்கொள்வதில் சீரற்ற தன்மை, கவலை எழுவதையும், அவற்றால் அவர்கள் ஏன் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்புடன் இயங்குகிறது என அந்த ஆய்வறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

1351 total views