சுவிஸ்குமார் விவகாரம்! சந்தேகநபருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

advertisement

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உடந்தையாக செயற்பட்டாரென்ற குற்றச்சாட்டில் கைதான, வடக்கு மாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவ் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் செல்ல நீதவான் எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.

அத்தோடு, வழக்கு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வெளிநாட்டிற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.

வழக்கு தொடுனர் தரப்பில் ஆஜனான அரச சட்டவாதி நிசாந்தன், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதில் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ஆட்சேபனைக்கான போதிய காரணங்கள் முன்வைக்கப்படாததால் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டது.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்து சந்கேதநபர் கையொப்பமிட வேண்டுமென உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

advertisement