இரசாயன தாக்குதல்: சிரியாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

advertisement

சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதத் தாக்குதல்களை முன்னெடுக்கக் கூடாது என அமெரிக்கா மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ள போதிலும், இனிவரும் காலங்களில் இரசாயன தாக்குதல்கள் தொடருமாயின் அதற்கு சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாட் கடுமையான பிரதிபலன்களை சந்திக்க நேரிடும் என பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் எச்சரித்துள்ளார்.

சிரியாவின் ஷெயராட் விமான தளம் மற்றும் அதன் அண்டை பகுதிகளின் நடவடிக்கைகளை அமெரிக்கா அண்மைக்காலமாக கண்காணித்து வருவதாக பென்டகன் பேச்சாளர் ஜெஃப் டேவிஸ் நேற்று குறிப்பிட்டார்.

அதன்படி அங்கு இரசாயன தாக்குதல்களுக்கு தயாராகி வருவதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்தே மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

எனினும், இரசாயன தாக்குதல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த சிரிய ஜனாதிபதி, கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற சரின் தாக்குதலையடுத்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் தமது படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement