பூனையை கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா....?

advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஷ் நகரில் கம்பிரியன் பார்க் என்ற இடம் உள்ளது.

கடந்த 2015–ம் ஆண்டில் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த பூனைகள் அடுத்தடுத்து மாயமாகின. பூனைகள் மாயமாவது மர்மமாகவே நீடித்து வந்தது.

இந்த நிலையில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் வாலிபர் ஒருவர் 17–வயதான கோகோ என்ற பூனையை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

பூனையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த வீடியோ பதிவை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கண்டனர். அப்போது அதே ஆண்டு சான் ஜோஷ் நகரில் ஒரு காரில் வாலிபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதையும், அவருக்கு அருகில் ஒரு பூனை துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதையும் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ராபர்ட் பார்மர்(வயது 26) என்பதும், கம்பிரியன் பார்க் பகுதியில் இருந்து பூனைகளை திருடிச் சென்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை அவர் 18 பூனைகளை திருடிச் சென்று அவற்றை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சாண்டா கிளாரா சுப்பீரியர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

அப்போது ராபர்ட் பார்மர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு, தனக்கு மன்னிப்பு வழங்கக்கோரி நீதிபதியிடம் கோரினார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதி அலெக்ஸ்சாண்ட்ரா எல்லீஸ், ராபர்ட் பார்மருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் ராபர்ட் பார்மர் விடுதலை ஆன பிறகு 10 ஆண்டுகளுக்கு, செல்லப்பிராணிகளை வளர்க்கவோ, பாதுகாக்கவோ கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

advertisement