கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் மாட்டிக்கொண்ட திருடன்.. எவ்வாறு தெரியுமா?

Report
65Shares

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் வீடு புகுந்து கொள்ளை அடித்த நபர் ஒருவர், வித்தியாசமான முறையில் மாட்டிக்கொண்ட தகவலை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

குற்றம் நடந்த வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, அதை நீர் ஊற்றிச் சுத்தம் செய்யாமல் போனதன் மூலம், அங்கு ஒரு முக்கிய தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.

லொஸ் ஏஞ்சலஸ் நகரின் புறநகர்ப் பகுதியான தவுசண்ட் ஓக்ஸில் அமைந்துள்ள, அந்த வீட்டின் கழிவறையில் சேகரிக்கப்பட்ட சந்தேக நபரான ஆன்ரூ ஜென்சனின் கழிவுகளின் மாதிரிகள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தொகுத்து வைத்துள்ள டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட, 42 வயதான ஆன்ரூ, கடந்த ஜூலை 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

'தன் வேலையைச் செய்து முடித்த சந்தேக நபர், கழிவறையில் நீர் ஊற்றாமல் போய்விட்டார்,' என்று வென்சுரா கவுண்டியின் காவல் துறை துப்பறிவு அதிகாரி, டிம் லோமன் தெரிவித்துள்ளார்.

'முடி மற்றும் எச்சில் தவிர பிறவற்றில் இருந்தும் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்க முடியும் என்று பலரும் நினைப்பதில்லை அல்லது பலருக்கும் தெரிவதில்லை,' என்று அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கூறினார்.

'குற்றவாளி விட்டுச் செல்லும் எல்லா விதமான தடயங்களையும் நாங்கள் தேடுவோம்,' என்று கூறிய அவர், 'அது ஒரு புகைத்து முடிக்கப்பட்ட சிகரெட் துண்டு அல்லது குளிர் பானப்புட்டி என எதுவாக இருந்தாலும் ஆராய்வோம்' என்று தெரிவித்தார்.

காவலில் வைக்கப்பட்டுள்ள ஆன்ரூ ஜென்சன் பிணையில் வெளிவருவதற்கு 70,000 டொலர் பிணைத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3489 total views