மனதை பதறவைக்கும் சம்பவம்..

Report
86Shares

மியான்மரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது ராணுவம் பதித்த நிலக்கண்ணிவெடிகள் மீது கால் மிதித்ததால் காயமுற்று ஊனமடைந்த ரோஹிஞ்சா முஸ்லீம்களிடம் பிபிசி ஊடகம் உரையாடியுள்ளது.

அவர்களில் ஒருவர் தனது இரண்டு கால்களையும் இழந்து வங்கதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 வயது சிறுவன்.

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்றொரு பெண், தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் ராணுவம்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது நிலக்கண்ணிவெடி மீது கால் பதித்ததாக தெரிவித்தார்.

நிலக்கண்ணிவெடிகளை யார் பதித்தது?

இந்த இரு சம்பவங்களிலும் யார் நிலக்கண்ணிவெடிகளை பதித்தது என்று தெரியவில்லை.

கடந்த சில வாரங்களில், மியான்மரில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சாக்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தாங்கள் நாட்டின் குடிமக்களை குறிவைப்பதாக கூறப்படுவதை ராணுவம் மறுத்துள்ளது.

பிபிசி குழு சென்று பார்த்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நிலக்கண்ணிவெடிகளால் காயமடைந்த பலர் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இரண்டு கால்களையும் இழந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார் 15 வயது அஜிஸு ஹக். இதே போன்ற நிலையில் ஹக்கின் மற்றொரு சகோதரர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் தெரிவித்தார்.

''எனது மகன்கள் மிகவும் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் இறந்துவிட்டதை போல அவர்களின் காயங்கள் மிகவும் மோசமாக உள்ளன.

அதிக துன்பத்தை அனுபவித்துவிட்ட எனது மகன்களின் உயிர்களை (இறைவன்) எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று அவர்களின் தாய் பிபிசியிடம் தெரிவித்தார்.

தனது சமூகம் மீது ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், மியான்மரை விட்டு தப்பிய சபேக்குர் நஹர், நாட்டின் எல்லையை தனது 3 மகன்களுடன் கடந்தபோது நிலக்கண்ணி வெடியில் கால் பதித்தார்.

''எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அவர்கள் நிலக்கண்ணி வெடிகளையும் பதித்துள்ளனர்'' என்று 50 வயதாகும் அப்பெண் தெரிவித்தார்.

'மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு'

முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, "இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.

ரகைன் மாகாணத்தில் "மோசமான ராணுவ நடவடிக்கையை" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 25 திகதி வடக்கு ரகைன் பகுதியில் உள்ள போலீஸ் சாவடிகள் மீது ரோஹிஞ்சா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 12 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

அப்போதிலிருந்து இப்பகுதியில் வன்முறை தொடங்கியது.

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமியர்களான ரோஹிஞ்சாக்கள், மியான்மரில் நீண்ட காலமாக அடக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றனர். ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்கள் என மியான்மர் கூறுகிறது.

3390 total views