வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி

Report
14Shares

உள்நாட்டு யுத்தத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு கனடா உதவியளிப்பதாக, ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த இலங்கைககான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவின் மக்கினொன் (David McKinnon) திருவையாறு வேளாண் பொருட்கள் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திற்கு பழங்கள் சேகரிப்பு, சேமிப்பு, மதிப்பிடல் மற்றும் விற்பனை தொடர்பான நிலையத்தை பாவனையாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவியுடன், கனடா இதற்கான உதவிகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஐ.நா. குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, விவசாய மதிப்பீட்டு மையத்திற்கு தேவையான அரிசி அரைக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள், தொழிநுட்ப பயிற்சி உதவிகள் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இதன்போது வழங்கப்பட்டன.

இவ்வுதவிகள் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தின் 1240இற்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாக பயனடைவர் என ஐ.நா. குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் நிலையான மற்றும் நீண்டகால வாழ்வாதார முன்னேற்றத்திற்கு இந்த விவசாய மதிப்பீடடு நிலையம் உதவியாக அமையுமென மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து இத்திட்டத்தில் இலங்கைக்கு உதவுவதில் கனடா பெருமையடையவதாக கனேடிய உயரஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான பொருளாதார முன்னேற்றத்தின் ஊடாக பாதிப்பட்ட மக்களின் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலும் பாரிய பங்களிப்பை செலுத்தலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக வடக்கு மக்களின் வாழ்வில் போதிய பங்களிப்பை செலுத்த கனடா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1137 total views