நியூசிலாந்திலுள்ள ஊடக நிறுவனம் ஒரு டொலருக்கு விற்பனை

Report

நியூசிலாந்திலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை நிறைவேற்று அதிகாரிக்கு, ஒருடொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள, 'நைன் என்டர்டெய்மென்ட்' நிறுவனத்துக்கு சொந்தமானது, 'ஸ்டப்' எனும் நிறுவனமாகும்.

ஸ்டப் பல்வேறு தினசரி பத்திரிகைகளையும் இணையதளத்தையும் நடத்தி வருவதுடன் ஸ்டப் நிறுவனத்தில், 400 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட, 900 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா பாதிப்புக்கு முன்னதாகவே, இந்நிறுவனத்தின் வருவாய் குறைந்து வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதன் விளம்பர வருவாயும் தடைப்பட்டுப்போனது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு, ஸ்டப் விற்பனை குறித்த தகவலை, 'நைன் என்டர்டெய்மென்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், ஸ்டப் நிறுவனத்தை, அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியான, சினேட் பவுச்சருக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

'ஸ்டப் நிறுவனத்தை, உள்ளூர்காரர்களே வைத்திருப்பது அதன் ஊழியர்கள், வாடிக்கையாளார்களுக்கு பலன் தருவதாக இருக்கும் என்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் அதன் பங்குதாரர்களாக இருந்து செயல்படுவர்' எனவும், சினேட் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அச்சகத்தை பொறுத்தவரை, அது, 'நைன் என்டெர்டெய்மென்ட்' வசமே இருக்கும் என்றும், அது, ஸ்டப் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 1993 ஆம் ஆண்டில் பத்திரிகையாளராக ஒரு நிருபராக சேர்ந்த சினேட் பவுச்சர் , தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிறுவனத்தில் கழித்தவர் என்பதுடன், இது ஸ்டப்பிற்கு "ஒரு புதிய சகாப்தம்" ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2175 total views