பிரதமருக்கும் - மாநில முதல்வர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!

Report

பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையேயான கூட்டம் ஒன்று நேற்று சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் மூடிய அறைக்குள் நேற்று நாள் முழுவதும் இடம்பெற்றுள்ள அந்த கூட்டத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தின் போது, பதற்றமான நிலை காணப்படும் என்று, குறிப்பாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வெளிநடப்புச் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மாநாட்டை சமாதானமான முறையில் கையாண்டு அமைதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் ட்ருடோ ஏற்படுத்தியுள்ள காபன் கட்டுப்பாட்டுத் திட்டத்தினை டக் போர்ட் ஏற்க மறுத்துவரும் நிலையில், அந்த விடயத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த இந்த விடயத்தினை தங்களுக்கிடையே விவாதித்துக் கொள்ளுமாறு மாநில முதல்வர்களை பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும், பிரதமரின் திட்டத்தின் அடிப்படையை டக் போர்ட் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதனை ஏனைய மாநில முதல்வர்கள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் முதல்வர்கள் விரும்பிய அனைத்து விடயங்களையும் இந்த கூட்டத்தின் போது பேசுவதற்கான சந்தர்ப்பத்தை பிரதமர் வழங்கியதாகவும், அதனால் அனைத்து விடயங்களும் விவாதிக்கப்பட்டதாகவும், நியூ பிரவுன்ஸ்விக் மாநிலத்தின் பழமைவாதக் கட்சி முதல்வர் பிளைன் ஹிக்ஸ் (Blaine Higgs) தெரிவித்துள்ளார்.

எந்தவித தடையும் இன்றி அனைத்து விடயங்களையும் பேசுவதற்கான சுதந்திரமும் சந்தர்ப்பமும் வழங்கப்பட வேண்டும் என்பதனையே தாங்கள் எதிர்பார்த்ததாகவும், அதேமாதிரியான வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் விபரித்துள்ளார்.

அத்துடன் தமது நீண்ட நாள் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பயனுள்ள மாநாடாக இது அமைந்தது என்று ஏனைய முதல்வர்களும் நேற்றைய மாநாடு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய மாநாட்டின் போது, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தினை வளர்த்தெடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக தடைகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களில் இணைந்த செயற்படுவதற்கு வழிசெய்யும் இணக்கக்குறிப்பில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, டக் ஃபோர்ட் உள்ளிட்ட அனைத்து முதல்வர்களும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1460 total views