கனடாவில் இவரை கண்டுபிடிக்க உதவினால் சன்மானம்? பொலிஸார் அறிவிப்பு

Report

கடந்த 2016ஆம் ஆண்டில் லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு 50,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அதிகாலை வேளையில், தனது மனைவி மற்றும் ஏனைய நண்பர்களுடன் பிறந்தநாள் வைபவம் ஒன்றிலிருந்து வெளியேறிய Kiesingar Gunn எனப்படும் அந்த நபர், தனது காரில் ஏறிப் புறப்பட இருந்த வேளையில், அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சிலர் சண்டையிடுவதைப் பார்த்து்ளளார்.

காரில் இருந்து இறங்கி மோதலில் ஈடுபட்டோரை நோக்கிச் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து விபரம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், அங்கு என்ன நடந்தது என்பதையும், இந்தக் கொலையை யார் புரிந்தார்கள் என்பதனையும் நன்கு அறிந்தவர்கள் நிச்சயம் இருக்கக்கூடும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சென்றிருந்த பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டோரில் சிலரிடம் தகவல் சேகரித்ததன் அடிப்படையில், சந்தேக நபரின் மாதிரி வரைபடம் ஒன்றினை தயார் செய்து பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த, சந்தேக நபர் 18இலிருந்து 23 வயதுக்கு உட்பட்ட, ஐந்து அடி 11 அங்குலத்திலிருந்து ஆறு அடி வரையில் உயரமுள்ள, மெல்லிய உடல்வாகு கொண்ட, கறுப்பு இன ஆண் என்று அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்தச் சந்தேக நபரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல்களை வழங்குவோருக்கு 50,000 டொலர்களை வழங்கத் தயாராக உள்ளதாகவும், அதற்கான கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3897 total views