கனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்! ஏற்படப்போகும் விளைவுகள்

Report

கனடாவில் தற்போது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அதில் அந்நிய உளவுத்துறை தலையீடுகள் குறித்த கரிசனையும் அதிகரித்துள்ளது என கனடாவில் வசித்துவரும் நேர குணரேட்னம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்.....

இந்நிலையில் இவ்வாரம் இது குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் கனடிய தேசிய பொலிசான ஆர்சிஎம்பியில் உளவுத்துறையில் அதிமுக்கிய பதவி வகித்த அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியிடம் இருந்து கனடாவின் பாதுகாப்பிற்கும் மற்றும் நேச நாடுகளின் பாதுகாப்பிற்கும் பாரிய பங்கம் ஏற்படுத்தக்கூடிய பல மிகவும் இரகசிய பாதுகாப்பு ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆவணங்களை அவர் வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் பகிர முற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் கனடாவின் இருப்பையே கேள்விக்குறிக்குள்ளாக்குவது மட்டுமன்றி கனடாவின் நேச நாடுகளுடனான உறவிலும் பெரும் பங்கத்தை ஏற்படுத்தவல்லவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் குறித்த உளவுத்துறை எது என்பதற்கான பதிலை இதுவரை கனடா வெளியிடாவிட்டாலும் கைதுசெய்யப்பட்ட அதிகாரி சீன விவகாரங்களிலேயே அதிக சிரத்தை கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் சீன மற்றும் இந்திய உளவுத்துறை சார்ந்த கனடிய உறவுகளில் ஒரு நெருக்கடியும் பதட்டமும் நிலவுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை கனடாவில் தேர்தல் காலமாகையால் தமது நிலையை கனடாவில் மேம்படுத்த இத்தேர்தலை தமக்கு சாதகமாக பயன்படுத்த சில நாடுகளின் உளவுத்துறைகளும் முயன்று வருகின்ற நிலையில் அது தொடர்பில் கனடிய உளவுத்துறை அதீத கவனத்துடன் செயற்பட்டு வருகின்றது.

அதிலும் சீன மற்றும் இந்திய உளவுத்துறைகள் கனடிய அரசியல் கட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனிநபர்களில் ஆதிக்கம் செலுத்தி தமக்கு ஆதரவானவர்கள் தெரிவு செய்யப்படுவதை ஊக்குவிப்பது என பல விடயங்களிற்கு கனடாவில் வதியும் தமது ஆதரவு சமூகங்களை பயன்படுத்துகின்றதனால் அவர்கள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கனடிய ஈழத்தமிழ் சமூகமும் இவ்வாறான உளவுத்துறை ஒன்றினால் தங்கள் நலன் சார்ந்து குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஈழத்தமிழ்ச் சமூகத்தில் சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீன மற்றும் இந்தியா முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும் கனடாவுடன் பதட்டத்தை கொண்டுள்ள சௌதி அரேபியா ஈரான் பாக்கிஸ்தான் மற்றும் வெனிசூலா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் குறித்தும் கனடிய உளவுத்துறை அதீத கவனத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிகபட்டுள்ளது.

மேலும் கனடாவின் தேர்தல் காலத்தில் இவ்வாறு அந்நிய உளவுத்துறைகளின் தலையீடுகள் கனடாவிற்கு இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

12518 total views