பகிரங்க மன்னிப்பு கேட்டும் கனடா பிரதமரை விடாமல் துரத்தும் சர்ச்சை! என்ன காரணம்?

Report

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருப்பு நிற ஒப்பனை புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது, அது தொடர்பில் பொதுமக்களும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கனடாவில் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஒரு புகைப்படம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் எதிர்வரும் அக்டோபர் 21 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார்.

இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்ன்னர் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த புகைப்படம் கிளப்பியுள்ள சர்ச்சை அவரது தேர்தல் பிரசாரத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2001ம் ஆண்டு, அப்போது பாடசாலையில் நடைபெற்ற ஒரு அரேபிய நிகழ்ச்சி ஒன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடோ முகம், கழுத்து மற்றும் கைகளில் கருப்பு மை பூசி வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கிறார்.

இதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ இனவெறியை வெளிப்படுத்தியதாக கூறி அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மட்டுமின்றி பன்முக கலாசாரம் கொண்ட மக்கள் வசிக்கும் கனடாவில், ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த புகைப்படம் நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து பகிர்ந்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், நிறவெறிக்கு எதிராகவும் பணிசெய்ய இருக்கிறேன்.

நான் எனது சிறுவயதில் பெரும் தவறு செய்துவிட்டேன். நான் அதைச் செய்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரம் கனடா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது மட்டுமின்றி, இந்த புகைப்படம் தொடர்பில் பொதுமக்களும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

2208 total views