கனேடிய மக்கள் தொகை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு? புள்ளி விபரவியல் துறை தகவல்

Report

கனேடிய மக்கள் தொகை வரும் 2068 ஆண்டில், தற்போதுள்ளதை விட கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, 55.2 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என நம்புவதாக கனேடிய புள்ளி விபரவியல் துறை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் கனடாவின் சனத் தொகை 37.1 மில்லியன் ஆக கணக்கிடப்பட்டது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்கள கணிப்புகளின் 2068 ஆம் ஆண்டில் அந்நாட்டு சனத்தொகை ஆகக்குறைந்தது 44.4 மில்லியனாக இருக்கும் அதிகபட்சம் இத்தொகை 70.2 மில்லியனாக இருக்கலாம்.

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் தொகையை ஆல்பர்ட்டா மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்பர்ட்டாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அடுத்த 25 ஆண்டுகளில் கனேடிய மாகாணங்களில் மிக உயர்ந்ததாக இருக்கும் கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

ஆல்பர்ட்டாவின் மக்கள் தொகை 2043 ஆம் ஆண்டில் ஆறு மில்லியன் முதல் 7.3 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 இல் ஆல்பர்ட்டாவின் மக்கள் தொகை 4.3 மில்லியனாக இருந்தது.

2043 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் தொகை குறித்த சரியான மதிப்பீட்டை புள்ளி விபரவியல் துறை வழங்கவில்லை என்றாலும் இங்கும் மக்கள் தொகை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வெறும் ஐந்து மில்லியனுக்கும் சற்று அதிகமான மக்களை தொகையைக் கொண்டிருந்தது.

இதேவேளை, 2068 ஆண்டில் சிரேஷ்ட பிரஜைகளின் தொகை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21 முதல் 30 விகிதம் வரை இருக்கும்.

தற்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சிரேஷ்ட பிரஜைகளின் வீதம் 17 ஆக உள்ளது. அத்துடன் 100 வயதைக் கடந்த கனேடியர்களின் தொகை 2068 ஆண்டில் 63,300 முதல் 113,000 வரை இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு கணிப்பீட்டின் படி, கனடாவில் 100 வயதைக் கடந்த பிரஜைகளின் எண்ணிக்கை 10,000 என மதிப்பிடப்பட்டது.

அடுத்த 50 ஆண்டுகளில் கனேடிய மக்கள் தொகை வளர்ச்சியில் குடியேற்றம் முக்கிய தாக்கத்தைச் செலுத்தும் என நம்பப்படுகிறது.

அதேவேளை, அடுத்துவரும் தசாப்தங்களில் கனடாவில் பிறப்பு விகிதம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.

3235 total views