தர்ஷிகாவிற்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ள முன்னாள் கணவர்: கனேடிய பத்திரிகை மூலம் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

Report

கனடாவில் பட்ட பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணிற்கு அவரது முன்னாள் கணவர், ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்ஷிகாவை கொலை செய்வதற்கு இரண்டு வாரங்கள் முன்பே, சசிகரன் தர்ஷிகாவின் சகோதரனிடம் அவரை கொன்றுவிடப்போகிறேன் என்று மிரட்டியிருப்பதாக பிரபல கனேடிய பத்திரிகை ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அலுவலகம் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்ஷிகா பேருந்து நிலையத்திலிருந்து Meadowvale சாலையிலுள்ள தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவரை கொலை செய்வதற்காக வழியில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார் சசிகரன்.

பின்னர் கத்தியால் தர்ஷிகாவை வெட்டிய சசிகரன், அவரது தலை முதல் கால் வரை பல இடங்களில் மிருகத்தனமாக வெட்டியிருக்கிறார்.

தர்ஷிகா வெட்டுப்பட்டு உயிரிழந்து தரையில் விழுந்து கிடந்த நிலையிலும் தொடர்ந்து வெட்டியதாக அதே கனேடிய பத்திரிகை தெரிவிக்கிறது.

சசிகரன் தர்ஷிகாவை வெட்டும்போது உயிர் பயத்தில் தர்ஷிகா ஓட, அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்திருக்கிறது அவரது மரண ஓலம்.

இந்த வன்முறையை காட்டும் காணொளிகளை சேகரித்துக்கொண்டிருகிறார்கள் பொலிசார்.

குறித்த சம்பவம் நடந்த நீண்ட தெருவில் இருந்த பல வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கமெராக்கள் முன்னும் பின்னுமாய் அந்த கோரக்காட்சிகளை பதிவு செய்திருக்கக்கூடும்.

அத்துடன் ஒரு எட்டு வயது குழந்தையும் அந்த சம்பவத்தின் ஒரு பகுதியை கண்ணால் கண்டதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

கொலை செய்யப்பட்டவரே பொலிசாரை அழைத்த சோகமும் இந்த சம்பவத்தில் நடைபெற்றதோடு, அதில் பதிவாகியிருக்கும் மரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

கொலை செய்துவிட்டு தப்பியோடின சசிகரன், இரத்தம் தோய்ந்த உடையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடையும்போதும் கடுமையான போதையிலிருந்ததாகவும், தன்னை கைது செய்ய முயன்ற பொலிசார் ஒருவரை குத்த முயன்றதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தர்ஷிகாவின் தந்தை மேலும் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2015இல் சசிகரனுக்கும் தர்ஷிகாவுக்கும் திருமணம் நடந்த நிலையில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் திகதிதான் கனடாவிலுள்ள சசிகரன் வீட்டுக்கு சென்றுள்ளார் தர்ஷிகா.

அங்கு சென்றபின், யாழ்ப்பாணத்திலிருக்கும் பெற்றோருடன் பேசுவதற்கு சசிகரன் அனுமதிக்காதது தர்ஷிகாவை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது.

அத்துடன் அவரது பாஸ்போர்ட் மற்றும் பிற பயண ஆவணங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார் சசிகரன்.

பின்னர் சசிகரன் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்ற விடயமும் அவர் மன நோய்க்காக சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களும் தர்ஷிகாவின் கையில் சிக்கியுள்ளன.

அத்துடன் போதைப்பொருட்களும் சசிகரனின் வீட்டில் கிடைத்துள்ளன. அந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு சசிகரனின் அண்ணனை அழைத்த தர்ஷிகா, அது குறித்து விசாரிக்க, அவரோ, சசிகரனுக்கு சில பிரச்னைகள் இருந்தது உண்மைதான், ஆனால் அவர் தற்போது குணமாகிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இது தொடர்பாக வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட, ஒரு முறை சசிகரன் தர்ஷிகாவை அடிக்கும்போது, உடனடியாக யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது தந்தையை தொலைபேசியில் அழைத்துள்ளார் தர்ஷிகா.

அவர் யாழ்ப்பாணத்திலிருந்தே பொலிசாருக்கு தகவலளிக்க, அவர்கள் வந்து சசிகரனை கைது செய்துள்ளார்கள்.

தர்ஷிகாவை சந்திக்கக்கூடாது என்று நீதிமன்றம் உததரவிட்டதையும் மீறி மீண்டும் மீண்டும் அவரை சந்தித்துள்ளார் சசிகரன்.

அப்படி 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருமுறை தர்ஷிகாவை சந்தித்தபோது, இரண்டு நாட்களில் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று சசிகரன் மிரட்டியதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடைசியாக நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டு 29 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டபின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சசிகரனுக்கு, தர்ஷிகா இருக்கும் இடத்திலிருந்து 500 மீற்றர் தொலைவுக்குள் வரக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

அதையும் மீறித்தான் தர்ஷிகாவை கொலை செய்திருக்கிறார் சசிகரன். இன்னும் சில நாட்களில் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வந்துவிடும், இனியாவது மகள் நிம்மதியாக வாழலாம் என தர்ஷிகாவின் பெற்றோர் நம்பியிருந்த நிலையில்தான் அவரை கொன்றிருக்கிறார் சசிகரன்.

ஏழ்மையின் பிடியில் இருக்கும் தர்ஷிகாவின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றது.

பெற்றோர், இன்னும் திருமணமாகாத இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என்றவாறு அவர்களின் குடும்ப அமைப்பு உள்ளது.

கனடா சென்றால் ஒருவேளை தனது குடும்பத்தை கொஞ்சம் நல்ல நிலைமைக்கு கொண்டுவரலாம் என எண்ணிச் சென்ற தர்ஷிகாவின் கனவு கனவாகவே போய்விட்டது.

36305 total views