எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற பெண் ஒருவரின் கண்ணில் பட்ட மொபைல் போன்! சிக்கிய நபர்
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கழிவறை ஒன்றிற்கு ஒரு பெண் சென்றபோது, அவருக்கு சிலந்தி என்றால் பயம் என்பதால், மேலே எங்கேயாவது சிலந்தி ஏதாவது இருக்கிறதா என்று தேடியவர் கண்ணில் பட்டது ஒரு மொபைல் போன்.
மனித்தோபாவிலிருந்து ஆல்பர்ட்டா செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காகவும் இயற்கை உபாதையை தணித்துக்கொள்வதற்காகவும் Circle Drive என்ற இடத்திலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றுள்ளது ஒரு குடும்பம். அப்போது ஒருவர் கழிவறைக்குள் சென்றிருக்கிறார்.
அவர் வெளியே வந்ததும் அந்த குடும்பத்திலுள்ள 8 முதல் 15 வயதுள்ள பெண் பிள்ளைகள் சென்றிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து கழிவறைக்கு சென்றுள்ளார் அவர்களது தாய்.
அவருக்கு எப்போதுமே சிலந்திகள் என்றால் பயம் என்பதால், எங்காவது சிலந்தி ஏதாவது உள்ளதா என்பதைப் பார்ப்பதற்காக மேலே பார்க்க, அவரது கண்களில் ஒரு மொபைல் போன் பட்டுள்ளது.
உடைந்த சீலிங்க் டைல் ஒன்றில் ஒரு மொபைல் போன் கீழ் நோக்கியவாறு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அந்த பெண், அந்த மொபைல் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதை தனது போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் அவர் வெளியேற, முன்பு கழிவறைக்குள் நுழைந்த ஆண் மீண்டும் கழிவறைக்குள் நுழைவதையும், வெளியேறிய அவரிடம் அந்த மொபைல் போன் இருப்பதையும் கண்டிருக்கிறார் அந்த பெண்.
உடனே அந்த நபரையும் ஒரு புகைப்படம் எடுத்த அந்த பெண், உடனடியாக பொலிசாரை அழைத்திருக்கிறார். பொலிசார் வந்து அந்த நபரைக் கைது செய்திருக்கிறார்கள்.
அவரது பெயர் Adnan Zafar Iqbal (25), பாகிஸ்தானிலிருந்து வந்த அவர் முன்பு அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
அவர் தரப்பில் வாதிட்ட சட்டத்தரணி, அங்கு வேலை செய்த தனது சக ஊழியர் ஒருவரை வேடிக்கை காட்டுவதற்காகத்தான் Iqbal மொபைல் போனை மறைத்து வைத்ததாக வாதிட்டார்.
பிரச்சினை என்னவென்றால், அந்த மொபைலை பொலிசார் ஆராய்ந்தபோது அதில் பிரச்சினைக்குரிய புகைப்படங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், அந்த பெண் கழிவறையிலிருந்து வெளியே வந்த ஒரு நிமிடத்திற்குள், அந்த மொபைலிலிருந்து ஒரு வீடியோ அழிக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தார்கள். ஆகவே, Iqbalக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் சிறை செல்வதற்கு முன், 30 மணி நேரம் சமூக சேவை செய்யவேண்டும் என்றும், மன நல ஆலோசனை பெறவேண்டும் என்றும், மாதத்திற்கு மூன்று முறை தனது மொபைல் போனை பொலிசார் சோதிக்க அனுமதிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பெண் மற்றும் அவரது மகள்கள் பெயரை வெளியிடுவதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதால் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.