கனடாவில் கணவன், மனைவி கொரோனா வைரசால் பாதிப்பு...19 பேர் தீவிர கண்காணிப்பில்!

Report

கனடாவில் கணவன், மனைவி இருவரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குட்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கனடாவில் முதல் நோயாளி நேற்று முன்தினம் இனங்காணப்பட்ட நிலையில் அவரது மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் மையமான வுஹானில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் கடந்த 22-ஆம் திகதி ரொரண்டோவுக்கு வந்தனர். இதன் பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கனேடியர்கள் சீனாவின் ஹூபே மாகாணத்திற்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரொராண்டோவுக்கு வந்த விமானத்தில் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியருடன் பயணம் செய்தவர்களை தொடர்புகொண்டு அவர்கள் குறித்தும் கண்காணித்து வருவதாக ஒன்ராயியோ மாகாண தலைமை வைத்திய அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், சளித் தொல்லை, இருமல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரியை அணுகி மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சந்தேகத்துக்கிடமான அறிகுறிகளுடன் இணங்காணப்பட்டுள்ள 19 பேரில் சிலர் ரொரண்டோவைச் சேர்ந்தவர்கள் என டாக்டர் வில்லியம்ஸ் கூறினார்.

1653 total views