இலங்கையிலிருந்து கனடா சென்ற இளைஞன்... அசட்டுத் துணிச்சலில் செய்த கொலை! வாழ்வை மாற்றிப்போட்ட கதை

Report

இலங்கையிலிருந்து அகதியாக கனடா சென்ற ஒருவர் இளவயதுக்கே உரிய அசட்டுத் துணிச்சலில் செய்த ஒரு கொலை அவரது வாழ்வையே மாற்றிப்போட்டது.

ஆனால், ஒரு காலத்தில் நீதிமன்றம் ஓநாய்க்கூட்டம் என்று அவரையும் அவரது கூட்டத்தினரையும் அழைத்த நிலையில், இன்று அதே கனடாவில் ஒரு சட்டத்தரணியாக ஆகியிருக்கிறார் அவர்.

1985இல் இலங்கையில் பிறந்த ரோஹன் சார்லஸ் ஜார்ஜின் குடும்பம், 1986இல் கனடாவுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தது.

15 வயது வரை ஒழுங்காக படித்த ஜார்ஜின் கவனம் கேங் ஒன்றின் பக்கம் திரும்பியது. விரைவில் கேங் தலைவரானார் ஜார்ஜ்.

2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி, Scarboroughவில் தனுஷன் ஜெயகுமாரன் என்பவரை கடத்த முயன்றனர் ஜார்ஜ் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர்.

ஜெயகுமாரன் முரண்டு பிடிக்க, அவருக்கு நான்கு முறை கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்து பட்ட அவரை காரில் தூக்கிச் சென்று அருகிலிருந்த பூங்கா ஒன்றில் வீசிச்சென்றனர் ஜர்ஜும் அவரது கூட்டாளியும்.

இலங்கையிலிருக்கும் தன் குடும்பத்தை கனடாவுக்கு அழைத்து வரும் இலட்சியத்திற்காக பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயகுமாரன், தனது இலட்சியம் நிறைவேறாமலே இறந்துபோனார். அடுத்த நாள் பொலிசாரிடம் சரணடைந்தார் ஜார்ஜ்.

சிறைத்தண்டனைக்குப்பின் 2009ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்தார் ஜார்ஜ். அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் வகித்த ஒரு மன நல ஆலோசகர் ஜார்ஜின் மனதை மாற்ற உதவினார்.

உண்மையாகவே தனது தவறுக்கு மனம் வருந்தினார் ஜார்ஜ். மனமாற்றம் என்பது செய்த தவறுக்காக வருந்துவதோடு நின்றுவிடக்கூடாது, நமக்கு நன்மை செய்த சமுதாயத்திற்கு திரும்ப நாம் நன்மை செய்யவேண்டும் என்று கூறும் ஜார்ஜ், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

முதல் வேலையாக பள்ளிப்படிப்பை முடித்தார். அடுத்து சட்டக்கல்லூரியில் இணைந்தார்.

தனது பதின்ம வயதில் தான் செய்தது போன்ற தவறுகளில் சிக்கிக்கொள்ளும் அபாயத்திலிருக்கும் இளைஞர்களுக்கு தான் வாழ்க்கையில் கற்ற பாடம் உதவும் என்று நம்பும் ஜார்ஜ், ஒரு சட்டத்தரணியாக முடிவு செய்தார்.

அத்துடன், படிப்பு போக மீதி நேரத்தில் ஆட்டிஸம் அமைப்பு ஒன்றில் தன்னாரவலராக இணைந்தார் ஜார்ஜ்.

அந்த அமைப்பின் தலைவரான கீதா மூர்த்தி கூறும்போது, பத்து ஆண்டுகளில் இப்படி ஒரு தன்னார்வலர் எனக்கு கிடைத்ததில்லை என்கிறார் ஜார்ஜைக் குறித்து.

ஆனால், சட்டத்தரணியாக பயின்றால் மட்டும் போதாதே, பணி செய்ய உரிமம் வேண்டுமே! ஜார்ஜுக்கோ குற்றப்பின்னணி உள்ளது, என்ன செய்வது?

அவர் சட்டத்தரணியாக பணி செய்யுமளவு அவருக்கு நற்குணம் இருக்கிறதா, அதாவது நன்னடத்தை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

விசாரணையின் முடிவு தீர்ப்பாணையத்திற்கு திருப்தியை கொடுத்தது. ஜார்ஜ் 29 சிபாரிசுக் கடிதங்களை தீர்ப்பாணையம் முன் வைத்தார். அவற்றில் 16 அவர் சார்ந்த சட்டத்துறையிலிருந்து வந்தது.

அவர்து டீன், துணை டீன் உட்பட பலரும் அவருக்கு நற்சான்றளித்திருந்தார்கள்.

அனைத்தையும் பார்வையிட்ட தீர்ப்பாணையம், ஒரு இளைஞராக தவறிவிட்ட இந்த விண்ணப்பதாரர், தனது வாழ்வையே தலைகீழாக மாற்றி, சமுதாயத்துக்கு பயனுள்ள ஒரு உறுப்பினராகியிருக்கிறார்.

அவர் நன்னடத்தை உள்ளவர் என்று கூறுவதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை, ஆகவே, சட்டத்தரணியாக பணியாற்றுவதற்கான உரிமம் பெற அவர் தகுதியுடையவர் என்று தீர்ப்பளித்துள்ளது.

35116 total views