கனடா தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொடிய கொரோனா வைரஸ்! எப்படி தெரியுமா?

Report

அவருக்கு வயது 102, அவர் மனைவிக்கோ 95, என்றாலும் அவர்களுக்கிடையிலான காதலின் முன் கொரோனாவின் வீரியமே தோற்றுப்போனது எனலாம்!

75 ஆண்டுகளுக்கு முன், Hilda Duddridge தன் கணவரான Lew Duddridgeக்கு ஒரு சத்தியம் செய்துகொடுத்தார், நீங்கள் வாழும் கடைசி நாள் வரையிலும் உங்களை நான் கவனித்துக்கொள்வேன் என்பதுதான் அது.

இந்த கொரோனா அதற்கு குறுக்கே வந்துவிட முடியுமா என்ன? 100 வயதானதும், Lew முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்படவேண்டியதாயிற்று.

தினமும் கணவரை சந்திக்க வரும் Hilda, இரவு வீடு திரும்பும்போது, நாளை காலை வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு செல்வது வழக்கம்.

மார்ச் மாதம் 16ஆம் திகதி, கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, முதியோர் இல்லத்தில் இருப்பவர்களைக் காண உறவினர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், அந்த தடையெல்லாம் Hildaவைத் தடுத்துவிடமுடியுமா என்ன? தினமும் 18 படிகள் ஏறி, இரண்டாவது தளத்திலிருக்கும் கணவனை ஜன்னல் வழியாகவாவது பார்க்க வந்து விடுகிறார் Hilda.

அறைக்குள் உட்கார்ந்து கொண்டு Lew தொலைபேசியில் பேச, கண்ணாடிக்கு வெளியில் அமர்ந்தவாறே தம் மொபைல் மூலம் பதிலளிப்பார் Hilda.

கணவருக்கு பிடித்த சாக்லேட்டுகளை அவரது அறை வாசலில் வைத்துவிட்டு, பேசி முடித்து Hilda வீடு திரும்பியதும், முதியோர் இல்ல ஊழியர்கள் அவற்றை எடுத்து Lewக்கு கொடுப்பார்கள்.

இந்த பிரிவின் காலகட்டம், எதையும் சமாளிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது என்று கூறும் Hilda, பொறுமை இருந்தால் போதும் எந்த விடயத்திலும் ஒரு நன்மையைக் காண முடியும் என்கிறார்.

எல்லாவாற்றிற்கும் பதில் அன்புதான், அதுதான் உலகை இயக்குகிறது என்கிறார் அவர். நான்கு குழந்தைகளை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததபின், ஜோடி உலகம் முழுவதும் சுற்றியதாம்.

போர்க்காலத்தில் சந்தித்த இந்த ஜோடியின் காதல் கதையை எழுத நிச்சயம் இந்த செய்தி போதாது!

அடுத்த வாரம் திருமண நாள் காணும் தம்பதியினரின் திருமண நாளை குடும்பமே சீரும் சிறப்புமாக கொண்டாட இருந்த நிலையில்தான், கொரோனா வந்து இருவரையும் கண்ணாடி தடுப்பு ஒன்றின் மூலம் பிரித்துவிட்டது.

இந்த பிரிவெல்லாம் தற்காலிகமானதுதான் என்பது Hildaவுக்கு தெரியும். எல்லாமே சரியாகிவிடும், நாம் பொறுமையாக மட்டும் இருந்தால் போதும் என்று கூறும் Hilda, மீண்டும் அவரை சென்று சந்திப்பதே மகிழ்ச்சியான ஒரு அனுபவம்தான் என்கிறார். தம்பதியின் காதல் கதை தொடர்கிறது!

19032 total views