சீனா விடுத்த எச்சரிக்கைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பதிலடி

Report

சீனாவின் மனித உரிமைகளை கனடா தொடர்ந்து பாதுகாக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளுக்காக நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் எழுந்து நிற்போம் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கான சீனாவின் தூதுவர் காங் பீவு கடந்த வியாழக்கிழமை கனடாவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ஹொங்கொங் செயற்பாட்டாளர்களுக்கு கனடா புகலிடம் வழங்குவதை எதிர்த்தும், இதனால் கோட்பாட்டளவில் தன்னாட்சி பெற்ற சீனப் பிரதேசத்தில் வாழும் மூன்று இலட்சம் கனேடியர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டியும் அவர் கனடாவை எச்சரித்தார்.

கனடாவின் தி குளோப் அன்ட் மெயில் நாளேடு, ஒட்டாவா சமீபத்தில் ஒரு ஹொங்கொங் தம்பதியினருக்கு புகலிடம் அளித்ததாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விடயத்தை கனேடிய அரசாங்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லையென்ற பின்னணியில் சீனா இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் ஷாம்பெயின், சீனத் தூதுவரின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமைய சீனாவின் ஹூவாவி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை கனடா கைதுசெய்த நிலையில் 2018 டிசம்பரில் இருந்து சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10122 total views