மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இரு சமுக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Report

ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு அளித்த புகாரின்பேரில், ‘டிக் டாக்’, ‘ஹலோ’ ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு அளித்த புகாரின்பேரில், ‘டிக் டாக்’, ‘ஹலோ’ ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அவற்றுக்கு தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் (ஆப்) மூலம், ஏராளமானோர் தங்கள் திறமைகளை வீடியோ எடுத்து பரப்பி வருகிறார்கள். இது, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே, இந்த செயலிகள், தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பியது.

அதன்பேரில், டிக் டாக், ஹலோ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலையும் அனுப்பி உள்ளது. அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், இரண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுள்ள சில கேள்விகள் வருமாறு:-

தேசவிரோத செயல்பாடுகளின் கூடாரமாக செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? இந்திய பயனாளர்களின் தகவல்களை இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் எந்த வெளிநாட்டு அரசுக்கோ, எந்த மூன்றாம் தரப்புக்கோ அளிக்க மாட்டோம் என்று உத்திரவாதம் அளிக்கத் தயாரா?

பொய் செய்திகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்த செயலிகளை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 13 என்று நிர்ணயித்து இருப்பது குழந்தைகள் உரிமையை மீறிய செயல்.

11 ஆயிரம் போலி அரசியல் விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்காக சில ஊடகங்களுக்கு ‘ஹலோ’ நிறுவனம் பெருமளவு பணம் கொடுத்ததாக கூறப்படுவதற்கு பதில் என்ன?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து டிக் டாக், ஹலோ நிறுவனங்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் வெற்றி சாத்தியம் அல்ல. அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

ஆகவே, இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம். தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த முதலீட்டை மேற்கொள்கிறோம். ‘திறன்மிகு இந்தியா’ போன்ற திட்டங்களை ஆதரிப்போம்.

இவ்வாறு அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

550 total views