இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி! - பிரெக்ஸிற் சுங்க ஒன்றியத்திற்கான சமரசத்துக்கு மே மறுப்பு!

Report

டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஆறு வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் 1.8% ஆக காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 1.4% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டின் பின்னர் மிக குறைந்த அளவில் பொருளாதாக வளர்ச்சி காணப்பட்டது கடந்த வருடமே எனவும் தேசிய புள்ளிவிபரங்கள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி மற்றும் கார் உற்பத்தியில் காணப்பட்ட மந்தநிலை உட்பட ஏனைய சில காரணிகளாலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரெக்ஸிற் காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை மற்றும் பலவீனமான உலகளாவிய பொருளாதாரம் காரணமாக 2019 ஆம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. bbc

பிரெக்ஸிற் சுங்க ஒன்றியத்திற்கான சமரசத்துக்கு மே மறுப்பு!

பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிரந்தர சுங்க ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கான திட்டத்துக்கு பிரதமர் தெரேசா மே மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தொழிற்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரெக்ஸிற் திட்டத்துக்கான கோரிக்கைகளில் பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிரந்தர சுங்க ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

தொழிற்கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தெரேசா மே-யை வலியுறுத்தியிருந்ததுடன் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமே தொழிற்கட்சியின் ஆதரவை பிரதமர் பெறுவதும் சாத்தியமாகவிருந்தது.

இந்நிலையில் தொழிற்கட்சியின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகத்தால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இக்கோரிக்கைக்கு பிரதமர் தெரேசா மே மறுப்பு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஒன்றியத்தில் இணைந்திருப்பது பிரித்தானியாவின் சுயாதீன வணிகக்கொள்கையை தடுக்கக்கூடும் என பிரதமரும் அவரது அமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரெக்ஸிற் சமரசத்தை எட்டுவதற்காக தொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பினுடன் மேலதிக பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால் தொழிற்கட்சியின் பிரதான கோரிக்கைக்கு பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளமை சமரச பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெக்ஸிட் விவகாரம்: இங்கிலாந்து கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்!

7004 total views