சென் - செந்தனியில் ஆயுதங்கள் வைத்திருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. Île-Saint-Denis நகரில் மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து பல்வேறு துப்பாக்கிகள், கைத்துப்பாகிகள், தோட்டாக்கள் மேலும் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பரிஸ் காவல்துறை தலைமைச் செயலகம் தெரிவித்த தகவல்களின் படி, முதலில் ஸ்கூட்டர் வகை உந்துருளியில் இரண்டு நபர்கள் நீண்ட குழல்களையுடைய இரு துப்பாக்கிகளை கொண்டு சென்றுள்ளனர்.
அவர்கள் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பின்னரே தரிப்பிடத்தில் நின்றிருந்த மகிழுந்துக்குள் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் செந்தனி நகர காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 'கைது செய்யப்பட்டவர்கள் சர்வதேச குற்றவாளிகள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.