அதிமுக கொடி கம்பத்தால் விபத்தில் சிக்கிய இளம்பெண்- இன்னொரு சுபஸ்ரீயா?

Report

தமிழ்நாட்டின் கோவையில் அதிமுகவின் கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் நிலை தடுமாறி அவர் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அனுராதா ராஜேஸ்வரி,தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று, தனது அலுவலகத்திற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்திப்பில் இருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோல்டுவின்ஸ் அருகே சென்ற போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் கீழே சாய்ந்தது. இதில், தன் மீது கொடி கம்பம் விழாமல் இருக்க, அனுராதா பிரேக் போட்டதாகவும், அந்த நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது பின்னால் வந்த லாரி அனுராதாவின் கால்கள் மீதும் ஏறி நசுக்கியதாக அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் , அனுராதா மீது ஏறிய அந்த லாரி, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர் மீதும் ஏறி இறங்கியதில் , அவருக்கும் கைகள் மற்றும் முட்டிகளில் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனுராதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனுராதாவின் மாமா கூறுகையில், கடந்தவாரம் கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க. அவிநாசி நெடுஞ்சாலை, முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் போலீசார் அதனை மூடி மறைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் பதாகைகள் வைக்க தடை விதித்த போதிலும், மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திப்பை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்க அனுமதி அளிக்கும் படி, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த செப்.12ஆம் தேதி பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்த நிலையில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பல்வேறு இடங்களிலும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் ஒன்றே சுபஸ்ரீயின் உயிரை பறித்தது.

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை அடுத்து , பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு , பேனரை அச்சடித்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டபோது பேனரை வைத்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்த நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபால், வேறுவழியின்றி சரணடைந்தார்.

இந்நிலையில் கோவை விபத்து சம்பவமானது, சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட அதேநாளில் நடைபெற்றுள்ளது.

அந்த வழக்கிலும் முதலில் லாரி ஓட்டுநர் மீது மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு பின்னரே அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவையில் அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

1266 total views