ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபா....அலை மோதும் மக்கள் கூட்டம்! மயங்கி விழுந்த முதியவர்

Report

ஆந்திராவில் உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க மக்கள் குவிந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக வெங்காய விலை உச்சத்தில் இருக்கிறது. நாட்டில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பெய்த கனமழையால் வரத்து குறைந்தது என்கின்றனர் வியாபாரிகள்.

கடந்த நான்கு மாதங்களாக வெங்காய விலை குறைந்தபாடில்லை. இதன்காரணமாக நடுத்தர வர்த்தக்கத்தினர் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

டீக்கடை முதல் நாடாளுமன்றம்வரை இந்த வெங்காய பஞ்சாயத்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்காய உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வெங்காயத்தைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை. வெங்காய ஏற்றுமதிக்குத் தடை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் வெங்காய விலை குறைந்தபாடில்லை.

வெங்காய விலையையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழ்நாடு, டெல்லி, மும்பை என நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ நூறு ரூபாய்க்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு மீம் கிரியேட்டர்களின் கண்டெண்டே வெங்காயம் தான். விதவிதமாக மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தலின்படி உழவர் சந்தையில் வெங்காயத்துக்கென தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாள்களுக்கு மேலாக ஆந்திர உழவர் சந்தையில் வெங்காயம் குறைந்த விலையில் கொடுக்கப்படுகிறது. இந்த மையங்களில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. காலை, மாலை என இருவேளைகளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இந்த மையங்கள் செயல்படும்.

நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்கின்றனர். இதற்காக ஜெகன் மோகன் அரசு 16,000 குவிண்டால் வெங்காயத்தை மாகாராஷ்டிராவிலிருந்து வாங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த மையங்களில் வெங்காய இருப்பு குறைந்துவிட்டதாக யாரோ கிளப்பிவிட்ட வதந்தியால் பொதுமக்கள் குவிந்தனர். Vizianagaram பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

மையத்தின் கதவு திறக்கவில்லை. சந்தையின் நுழைவுவாயில் மூடியிருந்தது. நுழைவுவாயில் கதவு திறந்ததும் மக்கள் ஓடினர். இதில் வெங்காயம் வாங்க பையுடன் காத்திருந்த முதியவர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த நபர்கள் தூக்கிவிட்டனர்.

அவருக்கு காயம் எதும் ஏற்படவில்லை. வெங்காய இருப்பு குறைந்துவிட்டதாக பரவிய வதந்தியே இந்தக் கூட்டத்துக்கு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1159 total views