ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் ஆறு பேர் பலி ; பலர் காயம்

Report
0Shares

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் இன்று காலை ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள கல் குவாரிக்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை அப்புறப்படுத்த முயன்றபோது இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் இந்த ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததை அடுத்து சிக்கபல்லபூர் மாவட்ட பொறுப்பாளர் அந்த இடத்தை சென்று பார்வையிட்டார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை வெடி விபத்து காரணமாக சிக்கபல்லாபூர் ஹிரெனகவல்லி கிராமத்திற்கு அருகில் 6 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, இது தொடர்பில் மாவட்ட விசாரணை அமைச்சரும் மூத்த அதிகாரிகளும் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், "கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடந்த விபத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறார்கள்" என்று கூறினார்.

194 total views