மலையில் சென்று கொண்டிருந்தபோது கோர விபத்தில் சிக்கிய பேருந்து - 26 பேர் பலி

Report

பாகிஸ்தானில் இன்று காலை மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாயுள்ளது.

இந்த விபத்தில் 26 பேர் பலியாகியதோடு 13 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கில்கிட்-பலுசிஸ்தான்(ஜிபி) எல்லையிலுள்ள பாபூசர் டாப் மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த குறித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்துஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பேருந்தில் 16 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உட்பட 40 பயணிகள் இருந்ததாகவும், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 26 சடலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த 13 பயணிகள் சிலாஸில் உள்ள மாவட்டத் தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பயணிகள் பேருந்து மலைப்பாதையின் ஒரு திருப்பத்தைக் கடக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும், சாரதி எவ்வாறு வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார் என்பது இன்னும் தெளிவாகவில்லை எனவும் டயமர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு மற்றும் பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த பயணிகளின் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து சடலங்களை ஸ்கார்டுவுக்கு கொண்டு செல்லவேண்டியுள்ள நிலையில், அதற்காக கில்கிட்-பலுசிஸ்தான் அரசாங்கத்திடம் ஒரு ஹெலிகொப்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

8265 total views