சூடான் நாட்டு தீ விபத்தில் சிக்கி பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள்! வெளியான தகவல்

Report

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் 50-க்கும் அதிகமான இந்தியர்களும் வேலை செய்து வந்தனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

703 total views