வீடியோ கால் பேசியபோது வெடித்துச் சிதறிய டேங்கர்! சூடானில் பரிதாபமாக பலியான தமிழர்

Report

சூடான் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாகக் கூறப்படும் தமிழக இளைஞர், அந்த நேரத்தில் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

சூடான் தலைநகர் கார்டூமினில் செயல்பட்டுவந்த செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்கள்.

அவர்களில் 18 பேர் இந்தியர்கள் எனக்கூறப்பட்டிருந்த நிலையில் பண்ருட்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் உயிரிழந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மானடிக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் ராஜசேகர் (35). இவருக்குத் திருமணமாகி கலைசுந்தரி (33) என்ற மனைவியும், ஷிவானி என்ற 3 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

டிப்ளமா செராமிக் படித்திருந்த ராஜசேகருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் வெளிநாடு செல்ல முடிவெடுத்து வீட்டில் கூறியபோது ``அவ்வளவு தூரம் போய் கஷ்டப்பட வேண்டுமா? இங்கேயே நல்ல வேலையாக தேடுங்களேன்” என மனைவி கூறியுள்ளார், ``நமக்கு இருக்கறது ஒரே குழந்தை. அதுவும் பெண் பிள்ளை. குழந்தையின் படிப்புக்கும், கல்யாணத்துக்கும் நகை சேர்க்க வேணாமா ? சீக்கிரம் நம்ம கஷ்டம் தீர்ந்துடும்” என மனைவியிடம் கூறிவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் சூடான் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில்தான் அங்கு ஏற்பட்ட தீ விபத்திதான் ராஜசேகரன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று மாலை கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த ராஜசேகரின் சித்தப்பா சூடான் நாட்டில் செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற தன் அண்ணன் மகன் ராஜசேகர், அங்கு டேங்கர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாகக் கூறுகிறார்கள். அவர் உயிரிழந்திருந்தால் அவரது உடலை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

அதோடு ராஜசேகர் எவ்வளவு வேலையாக இருந்தாலும் தன் மனைவியுடன் ஒரு நாளைக்கு 5 முறையாவது ராஜசேகர் பேசிவிடுவார். வீடியோ கால் செய்து தன் மகளுடன் கொஞ்சிப் பேசி விளையாட்டு காட்டுவார் என்றும், சம்பவ தினத்தன்றும் , மனைவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது ராஜசேகரின் பின்னால் திடீரென்று பெரும் சத்தத்துடன் தீப்பிழம்பு ஏற்பட்டிருக்கிறது.

அதனை பார்த்து அவர் மனைவி அதிர்ச்சியான நிலையில் உடனே வீடியோ காலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு ராஜசேகர் செல்போனுக்கு இணைப்பு கிடைக்கவில்லை.

அதையடுத்து, சூடானில் தீ விபத்து என்று செய்தியைப் பார்த்துவிட்டு இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது ராஜசேகர் இறந்துவிட்டதாகத் கூறியதாக அவரின் சித்தப்பா மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.

2531 total views