இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்! பெஞ்சமின் வலியுறுத்தல்

Report

பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை வைத்து தீர்மானிப்பதைவிட இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.

நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் வரும் 11-ம் தேதிக்குள் (புதன்கிழமை) புதிய அரசு அமைக்கப்படாவிட்டால்பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இஸ்ரேல் மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் வலியுறுத்தி டெல் அவிவ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக, 'தரமான அரசாங்கம்’ அமைப்பினர் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சியை சேர்ந்த வயதில் மூத்த உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று பிரதமருக்கு எதிரான பரப்புரை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் அரசியல் முடக்கத்துக்கு தீர்வுகாணும் வகையில் மக்களே தங்களுக்கான பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை மிகவும் அவசர அவசியமாக உள்ளதாக (காபந்து) பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஜெருசலேம் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தற்போதுள்ள நிலையில் ஓட்டுமொத்தமாக பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்துவதற்கு பல மாதங்கள் ஆகும். மேலும், மிக அதிகமான அளவுக்கு பணம் செலவிட வேண்டியிருக்கும்.

சில அவசியமான வேளைகளில் வழக்கத்துக்கு மாறான தீர்வுகளை கண்டே ஆகவேண்டும். எனவே, பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதைவிட மக்களே தங்களின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் உடனடியாக பிரதமர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

1151 total views