நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்

Report
47Shares

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை பிற்பகல் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நேற்றுக்காலை சிறிலங்கன் விமானசேவை மூலம், பாங்கொக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கனடாவின் ரொரன்டோ நகரில் இருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் அரசவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவரை சிறிலங்காவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்த நிலையில், பாங்கொக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இவர்களைத் திருப்பி அனுப்பும் உத்தரவை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சர்கள் சிலர் முயற்சி செய்ததாகவும், ஆனால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் இறுக்கமான போக்கினால் அது சாத்தியமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாடுகடத்தும் உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்களிடம், அதனை எழுத்துமூலம் தருமாறு குடிவரவுத் திணைக்களம், கோரியதாகவும் அவர்கள் அதற்கு இணங்காத நிலையில், சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் விமான நிலையத்துக்குள் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிலேயே முக்கிய பிரமுகர்களுக்குரிய வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், நாடு கடத்தப்படும் ஏனையவர்களைப் போன்று நடத்தப்படவில்லை என்றும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2259 total views