2009 மே 18 இல் புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் கைகுலுக்கியவர் யார்? - கண்கண்ட சாட்சிகள் விபரிப்பு!

Report
1423Shares

படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் நேற்று காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் யஸ்மின் சூக்கா மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களின் பட்டியலைக் கொடுப்பதற்கு இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

குறித்த 58ஆவது படைப்பிரிவு சரணடைந்தவர்களைத் தனது பாதுகாப்பில் கையேற்ற விடயம் ஐ.நா. விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த படைப்பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே பொறுப்பாகவிருந்தார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் ஜயசூரியவிற்கு கீழ் பணியாற்றியிருந்தார். கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில் சரணடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைகுலுக்கியுள்ளதோடு, அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதனை அங்கிருந்தவர்கள் நேரடியாகப் பார்த்த சாட்சியங்கள் காணாமல் போனவர்களுக்கான இணையத்தளமான ITJP இல் பதிவு செய்யப்பட்டுள்ளன” என யஸ்மின் சூக்கா குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் இராணுவத்துடன் சரணடைந்த நடேசன், புலித்தேவன் உட்பட்ட நுாற்றுக்கணக்கான புலிகளின் தலைவர்கள் இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள நிலையில் கண்கண்ட சாட்சியங்கள் வழக்கை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

47785 total views