இலங்கை குண்டு வெடிப்பில் வங்காளதேச பிரதமரின் பேரன் பலி! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்

Report

ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச பிரதமரின் பேரன் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தகவல் கிடைத்துள்ளது.

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்று விட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இதில் ஷேக் சோனியா குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலிலும் குண்டு வெடித்தது. அப்போது ஓட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் ஜயான் சவுத்ரி குண்டு வெடிப்பில் சிக்கினர்.

இதில், மஷியுல் ஹக்யு சவுத்ரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், ஜயான் சவுத்ரியின் உடல் நேற்று வங்காளதேசம் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16140 total views