சோமாலியாவில் இராணுவ முகாமை கைப்பற்ற வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் 8 பேர் நேர்ந்த கதி

Report

சோமாலியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்ற வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன.

சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.

மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்ற வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் 8 பேர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கேடோ பிராந்தியத்துக்குட்பட்ட கார்பாஹ்ரே நகரில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையில் சில மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகளும் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாக சோமாலியா ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

922 total views