ரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி! பாதுகாப்பு படையினர் அதிரடி

Report

ரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து கடல் உயிரினங்களை வேட்டையாடிய 161 வடகொரிய நாட்டினரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை அரங்கேற்றி வருகிறது. இதனால் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது.

பொருளாதார தடை காரணமாக வடகொரியாவை சேர்ந்தவர்கள் சிலர் அதிக பணம் ஈட்டுவதற்காக பிற நாட்டு கடல் பகுதிகளில் நுழைந்து சட்ட விரோதமாக மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ரஷிய எல்லைக்குள் நேற்று சட்ட விரோதமாக நுழைந்து கடல் உயிரினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த வடகொரிய நாட்டினரை ரஷிய கடலோர காவல் படையை சேர்ந்த வீரர்கள் தடுக்க முற்பட்டனர்.

அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு ரஷிய கடற்படையினரை தாக்கிவிட்டு அவர்கள் உடனடியாக படகுகளில் தப்பிச்சென்றனர்.

இந்நிலையில், கடலோர காவல் படையினர் தாக்கப்பட்டதையடுத்து இன்று ரஷியாவின் எல்லை பாதுகாப்பு படையினர், சிறப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் என அனைத்து பிரிவினரும் இணைந்து அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது ரஷிய எல்லைக்குள் சட்ட விரோதமாக அத்துமீறி நுழைந்து கடல் உயிரினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த வடகொரியாவை சேர்ந்த 161 வேட்டைக்காரர்களை ரஷிய படையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய 13 மோட்டார் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

1134 total views