டிசம்பர் 26ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்! எங்கே எப்போது பார்க்கலாம்?

Report

கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவும் நம்மை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு அறிவியல் காரணம் உண்டு. இருந்தும் அது பற்றிய புரிதல் நம்மிடையே மிகவும் குறைவு.

உண்மையில், கிரகணம் என்பது என்ன? கிரகணம் என்பது நிழல்தான். நிழலின் விந்தையான விளையாட்டே கிரகணம்.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். சூரிய கிரகணம் மூன்று வகைப்படும். முழுச் சூரிய கிரகணம் , வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம்.

சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால், அது முழுச் சூரிய கிரகணம். நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்க முடியாமல், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்புவளையம் போல் காட்சியளிக்கும். இதை நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறோம்.

சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல், ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும். இது, பகுதி சூரிய கிரகணம்.

வரும் டிசம்பர் 26-ஆம் தேதி, வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் குறித்து சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, "டிசம்பர் 26-ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் ஒரு அரிதான வான் நிகழ்வு. இதை தமிழகத்தில் காண முடியும்.

காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரை, மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் தெரியும். கிரகணம் ஏற்படும் போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல்போவதால் சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும், இதைத்தான் வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள்.

இந்தக் காட்சி தமிழகத்தில் திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, பழநி, கரூர், ஈரோடு, கோவை

மற்றும் உதகை ஆகிய பகுதிகளில் தெரியும். சென்னை, கன்னியாகுமாரி போன்ற பகுதிகளில் குறை சூரிய கிரகணமாகத் தெரியும்.

அதாவது, சூரியன் முழுவதுமாக மறையாது. இந்த அரிய வான் நிகழ்வை உரிய பாதுகாப்புடன் கண்ணாடி அணிந்து, வானியல் விந்தையை வெளியே வந்து கண்டுமகிழலாம்.

இதற்கான கண்ணாடிகள் மற்றும் சிறுநூல்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் வழங்கிவருகிறது. வீண் பயம் இல்லாமல் இந்த வளைய சூரிய கிரகணத்தைக் கண்டு மகிழலாம்" என்றார்.

11225 total views