புதிய அமைச்சரவைக்கான பொறுப்புகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

Report

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அடங்கலாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி உள்ளிட்ட 3 அமைச்சுகளின் கீழ் 88 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கு கீழான திணைக்களங்கள் அடங்கிய அதி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உட்பட்டுள்ளதுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆள்களை பதிவு செய்யும் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவுனம் உள்ளிட்ட 31 நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ், திறைசேரி, மத்திய வங்கி, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் அனைத்து அரச வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் உள்பட 48 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் இரு அமைச்சுகளான புத்த சாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் அனைத்து மத விவகாரத் திணைக்களங்கள், தொல்பொருள் மற்றும் கலாச்சார அலுவல் திணைக்களங்களும்

நீர் வழங்கல் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் என மொத்தம் 40 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

64 பக்கங்களைக் கொண்ட இந்த வர்த்தமானியில் 29 அமைச்சர்களுக்கான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 43-1 வது பிரிவு மற்றும் 46-1 வது பிரிவு ஆகியவற்றின் படி, அமைச்சர்களுக்கு உள்ளடங்கும் விடயங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதி சட்ட நிறுவனங்கள் ஆகியன இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரச தகவல் திணைக்களம், அரச அச்சுத் திணைக்களம் மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் கீழ் இடம்பெற்றுள்ளன.

726 total views