தெரேசா மே எமக்கு வழிவிடவேண்டும் : இங்கிலாந்து தொழிற்கட்சி

Report

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதையடுத்து பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தமது பிரெக்ஸிற் திட்டத்துக்கு பிரதமர் வழிவிடவேண்டுமென தெரிவித்துள்ளது.

தமது பிரெக்ஸிற் திட்டம் மாத்திரமே நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒன்று எனவும் அதனாலேயே தாம் பொதுத்தேர்தலுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தொழிற்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று தொழிற்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதன்போது பிரதமர் வெற்றிபெற்றால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுமெனவும் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் பேசிய தொழிற்கட்சியின் செய்தித்தொடர்பாளர், ‘அரசாங்கம் ஒதுங்கி நிற்கவேண்டும், பொதுத்தேர்தலொன்று நடத்தப்படவேண்டும் அதன் மூலம் மட்டுமே நாட்டினதும் பாராளுமன்றத்தினதும் நம்பிக்கையைப் பெற்ற புதிய அணியொன்றை உருவாக்கமுடியும்’ என தெரிவித்தார்.

அத்தோடு புதிய அரசாங்கத்தால் மட்டுமே 2016 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்வைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.

பிரெக்ஸிற் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க தயார்: ரஷ்யா

பிரெக்ஸிற் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் ஒத்துழைக்க தயாராகவிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மொஸ்கோவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்ஸிற் விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சினையை கண்டு ரஷ்யா மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எவ்வித உண்மையும் இல்லை.

ஒன்றுபட்ட, வலுவான மற்றும் முக்கியமாக சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றியம் அமைய வேண்டும் என்பது பிரெக்ஸிற் யோசனை உருவாவதற்கு முன்பிருந்து எமது விருப்பமாகக் காணப்படுகிறது. என்ன நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவிற்கு ஒத்துழைப்பதற்கு நாம் இயற்கையாகவே தயாராகவிருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

வலுவான தீர்மானம் எட்டப்படவேண்டும் : டச்சு பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் பிரெக்ஸிற் தொடர்பாக வலுவான தீர்மானமொன்றை எட்டுவதற்கு இருதரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே வலியுறுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதையடுத்து பத்திரிகையாளரிடம் பேசிய டச்சு பிரதமர் ‘தமக்கு என்ன வேண்டும் என்பதை பிரித்தானியா தான் கூறவேண்டும் எனவும் மிக குறைந்த அளவிலான நேரமே எம்மிடம் உள்ளது எனவும் கூறினார்.

மார்ச் மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் உடன்பாடொன்றை எட்டமுடியும் என தாம் இன்னும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பொருளாதாரத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் உலகின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றான நெதர்லாந்து, சர்வதேச வர்த்தகத்தின் ஏற்றத்தாழ்வுகளால் பாரிய அளவில் பாதிக்கப்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய அவர், ‘உடன்பாடற்ற பிரெக்ஸிற் நிச்சயமாக மிகவும் மோசமானதாகும். அதனால் சேதம் குறைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை டச்சு அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என கூறினார்.

பிரெக்ஸிற்றுக்கான மாற்றுத்திட்டத்தை பிரதமர் கண்டுபிடிக்கவேண்டும் -ஆண்ட்ரியா லீட்சம்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது குறித்த பாராளுமன்ற முட்டுக்கட்டைகளை உடைப்பதற்காக தனது பிரெக்ஸிற் திட்டத்தினை பிரதமர் தெரேசா மே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என கொன்சர்வேட்டிவ் கட்சியின் அமைச்சரவை தலைவர் ஆண்ட்ரியா லீட்சம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய வழியை நாம் கண்டுபிடிக்கவேண்டும், அதன் மூலமாகவே மார்ச் மாத இறுதியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடியும் என ஆண்ட்ரியா லீட்சம் கூறினார்.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்றுத்திட்டம் ஒன்றை சமர்ப்பிக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திட்டத்துக்கான நடவடிக்கையும் தோல்வியடையும் பட்சத்தில் ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானிய வெளியேறும் நிலை ஏற்படக்கக்கூடும்.

இன்று இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி பெறுவாரென தாம் நம்புவதாகவும் அமைச்சரவை தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் செயன்முறையை இடைநிறுத்துமாறு ஸ்கொட்லாந்து வலியுறுத்தல்!

பிரெக்ஸிற் செயன்முறையை இடைநிறுத்தி மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் தெரேசா மே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சருமான நிக்கோலா ஸ்டேர்ஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மே-யின் பிரெக்ஸிற் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தியையும், வருத்தத்தையும் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே ஸ்கொட்லாந்து முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”பல மாத கால வீணடிப்பிற்கு பின்னர் பிரதமர் மே சந்தித்த வரலாற்று முக்கியம்வாய்ந்த தோல்வியாக இது கருதப்படுகிறது. ஆனால், இனியும் காலத்தை வீணடிக்க முடியாது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உடன்பாடின்றி வெளியேறி அதன் மூலமான ஆபத்துகளை எதிர்நோக்குவதைவிட பிரெக்ஸிற் செயல்முறையை நிறுத்தி மீண்டும் மக்கள் வாக்கெடுப்பிற்கு விடுவதற்கான நேரம் வந்துள்ளது என எண்ணுகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதனால் நாடு ஏழ்மையடைவதுடன், மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் எதிர்கால தலைமுறைக்கான வாய்ப்புகள் என்பன சீரழிக்கப்படும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு மீண்டும் வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

7162 total views