ஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட 86 குடியேற்ற முயற்சியாளர்கள்!

Report

ஆங்கில கால்வாயின் ஊடாக சிறிய படகுகளில் இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட 86 குடியேற்ற முயற்சியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நோக்கி குறித்த குடியேற்ற முயற்சியாளர்களுடன் பயணித்த ஆறு சிறிய கப்பல்களை நேற்று எல்லைப் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் குடியேற்ற முயற்சியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது நேற்றைய தினமே என கருதப்படுகிறது.

மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என குடியேற்ற முயற்சியாளர்களுக்கு உட்துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை உள்ளடக்கிய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேற்ற முயற்சியாளர்களே இவ்வாறு ஆங்கில கால்வாயை கடக்க முற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 336 குடியேற்ற முயற்சியாளர்கள் உட்பட இந்த ஆண்டு சுமார் 1100 க்கும் மேற்பட்டவர்கள் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைந்துள்ளனர்.

மேலும் சமீபத்திய வாரங்களில் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்டவர்களில் குறைந்தது இரண்டு பேராவது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

580 total views