ஹாரியும் மேகனும் இன்னும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.... ஆனால் அரசர், அரசி இல்லை

Report

இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்ததுடன் தாம் சுதந்திரமாக வாழ நினைப்பதாக தெரிவித்திருந்தனர்.

இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் கூட தெரிவிக்காமல் இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அரச குடும்பத்தை விட்டு வெளியேற ஹாரியின் அண்ணன் வில்லியம்ஸ், மேகனின் சொந்த ஊர்தான் காரணம் எனப் பல தகவல்கள் கசிந்தவண்ணம் இருந்தன. இதற்கிடையில் கடந்த வாரம் இளவரசர் ஹாரியை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய ராணி எலிசபெத் , ஹாரியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் அரசக் குடும்பத்தைவிட்டு வெளியேற ஒப்புதல் தருவதாகக் கூறினார்.

இதனையடுத்து மேகன் அமெரிக்காவில் நடிகையாக இருந்ததிலிருந்தே அவருக்கும் கனடாவுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்ததால் ஹாரி -மேகன் தம்பதி கனடா செல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தம்பதி தங்களின் அரசக் குடும்பத்துப் பொறுப்பைக் கைவிட்டு ஓய்வு பெறுவதாக ராணி எலிசபெத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி ஆகிய மூவரும் எப்போதும் இங்கிலாந்து குடும்பத்தின் விருப்பமானவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் அனுபவித்த பல சவால்களை நான் உணர்கிறேன். மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன். குறிப்பாக மேகனை நான் மிகவும் பாராட்டுகிறேன். இங்கு வந்த சில நாள்களிலேயே அரசக் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹாரி தொடர்ந்து இளவரசராக இருக்கலாம் என்றும், வட அமெரிக்காவில் அவர்கள் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில் டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிட்டதுடன், வருங்காலத்தில் அரச நிகழ்வுகள், அரசக் குடும்பம் சார்ந்த சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ராணியின் இந்த அறிக்கை இது அரசக் குடும்பத்திலிருந்து பதவி விலகுவது என்ற பொருள்படும் எனக் கூறப்படுகிறது. ஹாரி - மேகன் தம்பதிக்குச் சிறந்த முடிவை ராணி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிப் பேசியுள்ள அரசக் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் ஜானி டைமோண்ட், “ இதைவிடத் தூய்மையான இடைவெளிபற்றி யோசிப்பது மிகவும் கடினம் என்றும், ராணி சிறந்த முடிவெடுத்துள்ளதாகவும், ஹாரியும் மேகனும் இன்னும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், ஆனால் அவர்கள் இனி அரசர், அரசி இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

8019 total views