அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது!

Report

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும், அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஈரானின் அணுசக்தி, இராணுவம் மற்றும் பிற துறைகள் சார்ந்த விடயத்தில் உளவு பார்த்து தகவல்களை திரட்டியதாக ஈரான் புலனாய்வு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். அணு ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடிக்கின்றது.

இந்த நிலையில், கடந்த ஓராண்டில் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ அமைப்புக்காக பணிபுரிந்த உளவாளிகள் 17 பேரை கைது செய்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த 17 பேரும் முக்கியத் துறைகள் குறித்து தகவல் திரட்டியதாக ஈரான் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கைது செய்யப்பட்ட இந்த 17 பேரில் எத்தனை பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எப்போது வழங்கப்பட்டது என்று அவர் தகவல் வௌியிடவில்லை.

அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டுள்ளார். சில உளவாளிகள் அமெரிக்காவின் விசா மோகத்தில் சிக்கி இந்தப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதாவது அமெரிக்கா செல்ல விரும்பும் ஈரான் மக்களுக்கு விசா அளிப்பதாக கூறி அவர்களை உளவுப் பணிக்காக அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதாக மஹமூத் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த அறிவிப்புக்குப் பின் கருத்து வௌியிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ‘ஈரானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இது போன்ற விஷயங்கள் தடையாக இருக்கிறது’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், உளவாளிகள் கைது செய்யப்பட்ட விடயத்தில் ஈரான் பொய்யுரைக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

39151 total views