அமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்!

Report

பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியில் 44 கோடி டாலர் நிதியை அமெரிக்க அரசாங்கம் குறைத்துள்ளது.

இதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள இம்ரான்கான் அரசாங்கத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 5 ஆண்டுகளுக்கு 750 கோடி டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது 450 கோடி டாலர் நிதி உதவி வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் அதில் 44 கோடி டாலர் நிதி குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனால் சுமார் 400 கோடி டாலர் நிதியை மட்டுமே பாகிஸ்தானால் அமெரிக்காவிடமிருந்து பெற முடியும்.

பயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தவறி விட்டதாக கூறியே, கடந்த ஆண்டு 130 கோடி டாலர் நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்தது.

குறிப்பாக ஹக்கானி பயங்கரவாத அமைப்பை இம்ரான் அரசாங்கம் ஒடுக்கவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது.

கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உடனான சந்திப்பின் போதும், 130 கோடி டாலர் நிதி உதவி ரத்து செய்யப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.

அத்துடன் தங்களுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்பதுடன், தங்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ள நிலையில், 44 கோடி டாலர் நிதி உதவி ரத்து செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானிற்கு கடும் பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1423 total views