அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.....உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி!

Report

அமெரிக்காவின் ஹவாய் தீவில், பியர்ல் ஹார்பர் ராணுவ படைத்தளத்தில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தின் போது, அங்கிருந்த இந்திய விமானப்படை தலைமை தளபதி பத்திரமாக இருப்பதாக, இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஹவாய் (Hawaii) தீவில் உள்ள ஹொனலுலு(Honolulu) நகரில், பியர்ல் ஹார்பர்-ஹிக்கம்(Pearl Harbor-Hickam) என்ற கடற்படை மற்றும் விமானப்படை ஆகியனவற்றின், கூட்டு ராணுவத் தளம் அமைந்திருக்கிறது.

இதில், கடற்படை தளத்தின் ஒரு வாயில் வழியே, உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில், கடற்படை சீருடையுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

அவர், தாம் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு, கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இறுதியில், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.இந்த தாக்குதலில், 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கும் அமெரிக்க கடற்படை, தாக்குதல் நடத்தியவர், தங்கள் நாட்டு கடற்படை மாலுமி என்றும், உயிரிழந்தவர்களும், படுகாயமடைந்தவர்களும் கடற்படை தள பணியாளர்கள் என்றும் கூறியிருக்கிறது.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பியர்ல் ஹார்பர்-ஹிக்கம்(Pearl Harbor-Hickam) கூட்டு ராணுவத் தளத்தின், மற்றொரு பகுதியில், பசிபிக் (Pacific) பிராந்திய நாடுகளின் விமானப்படை தளபதிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ள இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா (RKS Bhadauria) உள்ளிட்ட இந்திய விமானப்படை அதிகாரிகள் பத்திரமாக இருப்பதாக, இந்திய விமானப்படை கூறியிருக்கிறது.

விமானப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும், இந்திய விமானப்படைத் தெரிவித்திருக்கிறது.

2135 total views