அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள்!

Report

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமன முடிவுக்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள் சார்பில் பல்வேறு இடங்களிலும் மகளிர் பேரணி நடந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் மரணம் அடைந்த நிலையில் அந்த பதவிக்கு எமி கோனி பேரட் என்பவரை நியமிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக செனட் சபையின் ஒப்புதலை பெற்றுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு முன்பு பேரட்டை நியமனம் செய்ய டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த நீதிபதி கின்ஸ்பர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், எமி பேரட்டின் நியமன முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க நகரங்களிலும் பெண்கள் சார்பில் மகளிர் பேரணி நடைபெற்றது.

இதில் வாஷிங்டன் டி.சி.யில் பிரீடம் பிளாசாவில் இருந்து நேசனல் மால் வரையிலான பகுதியில் பேரணியாக சென்ற பெண்கள் எமி வெளியேற வேண்டும் என்றும், வலிமையான பெண்கள் என்ன செய்து விடுவார்களோ என்று எங்களை கண்டு நீங்கள் அச்சமடைந்துள்ளீர்கள். அதனால் எங்களை பயங்கரவாதிகளென கூறுகிறீர்கள். இந்த தேர்தலில் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

இதேவேளை நடப்பு ஆண்டில் நடைபெறும் அதிபருக்கு எதிரான 2வது பேரணி இதுவாகும். கடந்த ஜனவரியில் இதுபோன்ற மகளிர் பேரணி ஒன்று நடந்தது.

அத்துடன் கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக மிக பெரிய அளவில் மகளிர் பேரணி ஒன்ரும் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2324 total views