கடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு 4 நாட்களாக தத்தளித்தோம் மீட்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி

Report
50Shares

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ‘ஒகி’ புயலில் சிக்கிக் கொண்டனர். புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருந்த நீரோடியை சேர்ந்த சேவியர், முத்தப்பன் மற்றும் ஈஸ்டர்பாய் ஆகிய 3 மீனவர்களை கடற்படையினர் மீட்டு கேரளாவுக்கு கொண்டு வந்தனர். தற்போது அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புயலில் சிக்கி உயிர் பிழைத்தது எப்படி? என்பது பற்றி மீண்டு வந்த 3 பேரில் சேவியர் என்ற மீனவர் கூறியதாவது:-

நான் உள்பட நீரோடியை சேர்ந்த முத்தப்பன், ஈஸ்டர்பாய், ஜாண்சன் மற்றும் சவேரியார் ஆகிய 5 மீனவர்களும் கடந்த 28-ந் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றோம். 29-ந் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென புயல் காற்று வீசியது. இதனால் ராட்சத அலைகள் எழும்பி எங்களது படகில் மோதின.

இதில் படகு தலை கீழாக கவிழ்ந்தது. நாங்கள் 5 பேரும் கடலில் விழுந்தோம். இதனால் செய்வதறியாது, நாங்கள் 5 பேரும் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் தவித்துக்கொண்டு இருந்தோம். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததோடு கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதால் உயிருடன் கரை திரும்ப முடியுமா? என்று எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.

படகு கவிழ்ந்ததில் ஜாண்சன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. சில மணி நேரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர் எங்கள் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை அலை இழுத்துச் சென்று விட்டது. எங்களால் அவரது உடலை கூட மீட்க முடியவில்லை. 30-ந் தேதி இரவில் புயல் நின்று விட்டது. கடலும் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும் படகு கவிழ்ந்து விட்டதால் எங்களால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

புயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் 4 நாட்களாக நடுக்கடலிலேயே படகை பிடித்துக்கொண்டு தத்தளித்தோம். இரவில் கடும் குளிரில் தண்ணீரில் மிதந்தோம். இதனால் எங்களது கை, கால்கள் மரத்துப்போகும் நிலை ஏற்பட்டது. புயலில் சிக்கிய 3 நாட்களுக்கு பிறகு சவேரியாரும் இறந்து போனார். அவரது உடலை நான் பிடித்து வைத்திருந்தேன். ஆனால் எனக்கும் கையில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் வெகு நேரம் உடலை பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இதனால் அவரது உடலும் கடலில் மூழ்கியது. மீதமிருந்த எங்கள் 3 பேரையும் காப்பாற்ற யாரேனும் வரமாட்டார்களா? என்று ஏங்கினோம்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் வந்து எங்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு, கேரள கடற்கரைக்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர். எங்களுக்கு கேரளாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இவ்வாறு சேவியர் அழுதுகொண்டே கூறினார்.

2773 total views