மலேசியாவில் பிரதமர் மாற்றம் ஏற்படலாம்: மொஹமட் மஹதிர்

Report
24Shares

மலேசியாவின் தற்போதைய பிரதமர் மொஹமட் மஹதிர் “இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயதான மொஹமட் மஹதிர் மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் “இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பிரதமராகப் பதவி வகிப்பேன், நாளை சிறையிலிருந்து வெளிவர உள்ள அன்வர் இப்ராஹிம் இன்னும் சில ஆண்டுகளில் பிரதமராகப் பதவியேற்கலாம்.

பிரதமர் பதவியை விட்டு விலகினாலும், மலேசிய அரசின் பின்னால் இருந்து முக்கிய பங்காற்றுவேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில் நான் பிரதமராகத் தொடரும் காலப்பகுதி வரை அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் தலைவராக இருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது தேர்தல் பிரசாரத்தின் போது, அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதமராக்கப்படுவார் என மொஹமட் மஹதிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசியாவின் துணைப் பிரதமராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1582 total views