உலகமே வியந்து பார்த்த மீட்புப் பணி

Report
39Shares

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களையும் பயிற்சியாளரையும் உயிருடன் மீட்டது உலகை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது தாம் லுவாங் குகை. சுமார் 10 கி.மீ. தூரமுள்ள இந்தக் குகைக்கு கடந்த மாதம் 23-ம் தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என 13 பேர் சாகச பயணம் மேற்கொண்டனர். மலை உச்சியில் இருந்து 800 மீட்டர் ஆழத்தில் இந்தக் குகை அமைந்துள்ளது.

இவர்கள் குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்ற போது திடீரென பலத்த மழை பெய்தது. இதில் குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் குகைக்கு உள்ளே மேலும் சிறிது தூரம் சென்று மேடான பாறை இடுக்கில் ஏறிவிட்டனர். வெள்ளம் சூழ்ந்ததால், அவர்களால் வெளியில் வர முடியவில்லை. குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாய்லாந்து, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாட்டு குகை மீட்பு வல்லுநர்கள், முக்குளிப்பு வீரர்கள் அங்குக் குவிந்தனர்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அதன்பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்கள், திங்கட்கிழமை 4 சிறுவர்களை மீட்டு வந்தனர். கடைசியாக செவ்வாய்க்கிழமை 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து ‘சீல்’ படையினர் (கடல், வான், நிலம் ஆகிய 3 பகுதிகளிலும் செயல்படும் திறமை மிக்க வீரர்கள்) உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

குகைக்குள் சிக்கியவர்களை மீட்டது சாதாரண விஷயமல்ல. சோதனை முயற்சி, தவறுகள், அனுபவம் இல்லாமல் உடனுக்குடன் எடுத்த முடிவுகள், திறமை, தண்ணீரை வெளியேற்றும் ஏராளமான குழாய்கள், மோட்டார்கள், வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் குகைக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்றது போன்ற ஒவ்வொரு விஷயமும் சிலிர்க்க வைக்கும் நடவடிக்கையாகும்.

பிரிட்டனை சேர்ந்த 2 முக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் (ஜூலை 2-ம் தேதி) கண்டுபிடித்தனர். அவர்கள் வெளியில் வந்து சிறுவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி செல்வது போன்ற எல்லா விவரங்களையும் தெரிவித்தனர். அதில் முக்கியமானவர் ஜான் வோலந்தன். அவரைப் பார்த்ததும் சாப்பிட ஏதாவது கிடைக்குமா, இப்போதே எங்களை அழைத்து செல்ல முடியுமா என்றுதான் சிறுவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், பிரிட்டன் முக்குளிப்பு வீரர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்புப்பணியைத் தொடங்க முடிந்தது. அதன்பின், தாய்லாந்தை சேர்ந்த 4 முக்குளிப்பு வீரரர்கள் குகைக்குள் சென்று அங்கேயே தங்கி சிறுவர்களுக்குத் தேவையான அதிக புரோட்டீன் உள்ள உணவுகளைக் கொடுத்து பாதுகாத்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுவர்கள் இருக்கும் இடத்துக்கு துணிச்சலாக தனியாளாக சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுத்து விட்டு திரும்பும் போது தனக்கு ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் தாய்லாந்து கடற்படை முன்னாள் வீரர் சமன் ககன் என்பவர் கடந்த 6-ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுவே குகையின் அபாயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைத்தது.

தாம் லுவாங் குகை நேர் வழி பாதையாக இல்லை. சில இடங்களில் 33 அடி உயரத்துக்கு இருந்தாலும், பல இடங்களில் குறுகிய பாதை, ஏறி இறங்கும் சிறுசிறு குன்றுகள் போன்ற அமைப்புடையது. குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் பலருக்கு நீச்சலும் தெரியாது. குறுகிய பாதை இருக்கும் இடங்களை ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கடந்து வருவதும் ஆபத்தானது.

எனவே, சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுத் தந்து மீட்க வேண்டும். அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்க வேண்டும். அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது என்று தாய்லாந்து ராணுவம் முதலில் முடிவு செய்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் முக்குளிக்கும் வீரர்கள் குகைக்குள் சென்று வருவது ஆபத்தாக இருக்கும். நேரமும் ஆகும் என்று கணிக்கப்பட்டது.

எனவே, மலை உச்சியில் ஓட்டை போட்டு குகைக்குள் இருக்கும் சிறுவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குகை சுமார் 10 கி.மீ. தூரம் இருந்தாலும், முட்டு சந்து போல் முடிந்து விடும். குகைக்கு மறுவழி என்று எதுவும் இல்லை. அதனால் குகை முடியும் இடத்தில் பள்ளம் தோண்டி சிறுவர்களை மீட்க முயற்சி நடந்தது. இவை எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆனால், ராட்சத மோட்டார்கள் வைத்து குகைக்குள் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சி கை கொடுத்தது. அத்துடன் குகைக்குள் தண்ணீர் நுழைவதைத் தடுக்க உடனடியாக சிறிய அணை உருவாக்கப்பட்டது. குகையில் உள்ள சிறுவர்கள், பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர். இந்த மீட்புப் பணியில் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள், 20 அரசு துறைகள், முக்குளிப்பு வீரர்கள், குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் வல்லுநர்கள் என ஒரு பெரும் படையே ஈடுபட்டது.

இதற்கிடையில் குகைக்குள் 2 முக்குளிக்கும் வீரர்கள் செல்வது, அங்கிருந்து இருவரும் ஒரு சிறுவனை மீட்டு வருவது என்று திட்டம் தீட்டப்பட்டது. முன்னதாக குகையில் இருந்து வெளியில் வரும் வழி முழுவதும் ஒரு கயிறு போடப்பட்டது. அதன் வழியாக 2 மீட்பு வீரர்களும் ஒரு சிறுவனும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. குகைக்குள் செல்லும் 2 வீரர்களில் ஒருவர், சிறுவனுக்கு பொருத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்து கொள்வது, மற்றொரு வீரர் சிறுவனை பத்திரமாக வெளியில் கொண்டு வருவது என்று திட்டமிட்டனர். நீச்சல் தெரியாததால், சிறுவர்களுடைய முகத்தில் மூச்சுக் கவசமும் பொருத்தப்பட்டது. ஏற்கெனவே குகைக்குள் உள்ள கயிற்றை பிடிமானமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு சிறுவனாக மீட்டுள்ளனர்.

ஆனால் தாம் லுவாங் குகை மேடும் பள்ளமுமாக, சில இடங்களில் குறுகலாகவும் இருந்ததால், நீந்துவது மட்டுமல்லாமல், சில இடங்களில் நடக்கவும், சில இடங்களில் பாறை மீது ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. குகையின் நுழைவு வாயிலில் இருந்து சற்று தொலைவில் மீட்புப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். அதுவரை சிறுவர்கள் வந்துவிட்டால் ஆபத்து நீங்கி விடும். அங்கிருந்து நடந்தே வெளியில் வரலாம். ஆனால், அந்த முகாம் வரை சிறுவர்களை கொண்டு வருவதுதான் மிகப்பெரும் சவாலாக இருந்தது.

இதுகுறித்து தாய்லாந்து கடற்படையினர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், ‘‘இது அதிசயமா, அறிவியலா, வேறு எதுவோ தெரியாது. 13 பேரும் இப்போது குகைக்கு வெளியில் வந்துவிட்டனர்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பயிற்சியாளர் எக்காபோல் சன்டாவாங்கையும் பாராட்டி வருகின்றனர். வெளியில் இருந்து உதவி வரும் வரை அவர்தான் 12 சிறுவர்களுக்கும் 9 நாட்களாக தைரியம் சொல்லி உயிருடன் இருக்கவும், அவர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும் உதவி செய்துள்ளார்.

1692 total views